Friday 30 October 2015

காலம் தரும் மாய ஒளி.


பிரிவில் வறழும்
காதலர்போல்
விழுந்து கரைந்த
சருகுகளைக் காணாது
தனித்துக்கிடக்கும்
மரத்தடி
அவள் உதட்டின்
முறுவல் போல்
அரும்பும் குருத்துகள்
காலத்தைக் காதலித்து
பொழுதோடு
காமுற
தாவணி மறைவில்
ஓரக்கண்ணால்
உசுப்பிவிடும் அவள்
பார்வை போல்
வசந்த கால
வாசல் கதவுகள்
மெல்லத்
திறக்கின்றது


இத்தனைகாலம்
சூட்டின் இதத்துக்காய்
போர்திய
அங்கிகள்
புணர்வின் தேவைபோல்
ஒவ்வொன்றாய்
கழன்று விழ

அமைதியான
அவள் முதல்
முத்தச் சம்மதம்போல்
பொழுதில்
வெள் ஒளி
மேனியை சிலிர்ப்பூட்ட

முதல்
அணைப்பின்
பட படப்பில்
இரவும் பகலாக்கும்
ஏக்கம்போல்
மெல்ல மெல்ல
பொழுது
ஓளியில் கரைய
காமத்தில்
கரையும் ஊடலைப்போல்
சிலகாலம்
புதையுண்ட
பொழுதாக
மீண்டதுபார் இயற்கை

இக் காலம் தரும்
மாய ஒளி
சேர்ந்த
புதுக் காதலரின்
அலுக்காத
அன்பைப்போல்
மகிழ்வாகும் மனதுக்குள்.

No comments:

Post a Comment