Saturday 1 October 2016

நெருப்பாற்றில்


அமைதி இழந்த காட்டின்
சலசலப்பில்
பசுக்கள் திசை அறியாது பட்டிகளை
மேய்கின்றது

ஒரு கன்னையில் ஒட்டமுடியாது
நாய்கள்
பசுக்களைக் காப்பதாய்
தனித்தனியே ஊழையிடுகின்றது

நாய்களின் திசைஅறிந்து
நரிகள்
பசுக்களின் பக்கம் பயணமாகின்றது

பசுவைத் தின்று ஊண் வடியும் தன் வாயை
காகங்கள்
துடைத்தபடியே நாய்களைப்
பகிடிபண்ணிப் பறக்கிறது

கழிகொல்லும் பொருஅமைதி



கரைக்கும் 
கடலுக்குமான தூரத்தில்
மகிழ்ச்சிக்குள் மனம் சிந்தை
கொல்ல
மொழி அற்றுத்தவிக்கிறது நா

நதியின் லயம் ஆகாயத்துளிகளால் சிதம்ப
ஆத்மா கரையும் ஓசை
அனிச்சையான அமைதியின் ஊடே
படபடக்கும் நெஞ்சுக்குள்
நினைந்துஉருகும்

மூங்கில் வனத்தில் காற்று
துளையோடு உறவாட
பனிபடர்ந்த பச்சிலைப்பரப்பில்
உருகி வழியும் நீர்த்துளியில்
நா நனைக்கும்
இசையாலே தனை மறந்த மிருகமது

எண் திசையின் இயல்போல
இசையோடு நீந்திவரும் நதி மூழ்கும்
இயல்பு நிலை
நிகழ்ந்தபின்னே பெரு அமைதி
மூச்சாகி
காற்றோடு கலந்துநிற்கும்

இயல்பும் இசைவும்


இயல்பைமீறிப் பறக்கும் பூமியில்
பணக்காரனாக ஆசைப்படுகின்றேன்

ஆசைகளை இரண்டாகப்பிரித்து
இரண்டு அடயாளங்கள் கொண்டு
இரண்டு குடுவைகளில் நிரப்பியுள்ளேன்

காவுவதற்காய் ஒன்றை
எழுமாற்றாய்
தெரிவு செய்திருக்கின்றேன்

காவும் தூரம் எந்தக்குடுவையிலும்
தீர்மானிக்கப்படவில்லை

எடுக்கப்பட்ட குடுவைகளின் கனதி கட்டாயம் காவவேண்டும் என்ற நிர்பந்தத்துள் விதிக்கப்பட்டுள்ளது

காலவேகத்தில்
காவிவந்த குடுவை
விட்டு வந்த குடுவையையும்
முந்திவிட்டது

தேர்வுசெய்த குடுவையுள்
வாழ்வு புதைக்கப்பட
காவிவந்த, காவிவரா குடுவைகள்
இன்றும் ஏழையே

வானுமோர் வள்ளள்


முகில்க்கூட்டம் விழுங்குகிறது
நட்சத்திரங்களின் வாழ்வை

காரணம் கேட்கும் மண்மீது
முறைக்கின்றது காற்றின் பயனம்

இடையே எட்டிப்பார்க்கும் நிலா
முகிலுக்குள்
காதல் நரம்புகளை உசுப்பிவிடும்

கல கலத்த சருகுகள் முறைக்கும் காற்றோடு பயனமாக

மெல்லியதாய் ஒரு சொட்டுத்தண்ணி
மேனி தடவும்

அனல்போல் கொதிக்கும் அந்தரங்கள்
ஆவியாக்கும்

இருள் தின்ற வானம்
காதல் கடந்து காமம் எய்த
முழுதாய் நனைகின்றது மண்

நினைவோர் வரம்


அம்புலி அற்ற தாரகைஒளியில்
இருளின் நிசப்த்தம் நீண்டு 
அன்பின் உணர்வில் 
வார்த்தைகள்
காலத்தின்ஊடே கரைகிறது

பனிக்காற்றில் மிதந்துவரும் மூச்சின்சந்தம் பரவிக்கிடக்கும்
இருளின் திரையில்
வண்ணங்கள் பூச
முகம் படிந்த
மணித்துளியின் மேலே ஊர்கிறது
சூரிய ஒளி

இலைகளின் முத்த இசை
மொட்டுக்களை பூப்புக்காய் அழைக்க
கற்றில் மிதக்கிறது போதைதரும்
நினைவெனும் பாணம்...

ஒப்பந்தம்


உணர்வின் மிதப்பு வார்த்தைகளை
விழுங்கி
கண்கள்
கண்டம் விட்டுக் கண்டம் 
ஒப்பந்தம் செய்கின்றது

போருக்கான அழைப்பு
ஒப்பந்தத்தின் மாற்று விதியாய்
புன்னகையில் சேர்கின்றது

இவ்வாறு ஒப்பந்தங்கள் இருந்து இருந்தால்
நெப்போலியன் காலத்தின் முன்
மனிதனைக் கொல்லும் கலை
மனிதருள் வளர்ந்திருக்காது
நிறங்கள் வெறும் நிறங்களாகவே இருந்திருக்கும்
படைப்பின் இரகசியம் உறுப்புகளின்
கழிவில் இருந்தே என்ற உண்மை புரிந்திருக்கும்

இந்த
ஒப்பந்தங்கள் நிறைவதற்குள்
அமைதிக்கான உலக ஒழுங்கு
கொலைகளால் மாலை சூடிக்கொண்டது

Friday 30 October 2015

துரோகத்தில் சிவந்த தொடுவானம்


விடிவை விரும்பாத மேகங்கள்
எல்லாப் பொழுதுகளிலும்
சூரியனைச் சூழ்ந்துகொள்கின்றது