Monday 28 May 2012

இப்படிக்கு


அன்புள்ள மகனுக்கு
ஐயா நலமா
அடுத்த மடல் எழுது
அம்மா நலம் கேட்டு

பத்து மாதம் சுமந்த தாய்
பாசத்தோடு எழுதுகிறேன்
நான் பெற்ற திரவியமே
நல்ல சுகம் நான் ஐயா


திரைகடல் ஓடியெல்லோ
திரவியம் தேடவென்று
செல்லத்தை அனுப்பிவைத்தேன்
சிதைவடைந்து எழுதுகிறேன்

சீமைக்கார துரைகள் எல்லாம்
சிறப்பாக வாழ்தல் கண்டு
சீமான் என் மகனை
சீமைச் சிறை  அனுப்பிவைத்தேன்

அடிவயிற்றில் பசி எடுத்தும்
அன்னை தட்டெடுத்து
ஊட்டமறுத்து விட்டால்
உண்ணாத் தவமிருப்பாய்

ஐந்தாறு நாள் சென்றும்
அணிந்த ஆடை எல்லாம்
அழுக்கு மணம் எடுத்தும்
அன்னை எல்லா தோய்த்திடுவன்

முழுகும் வேளையிலே
முதுகு ஊத்தைமுதல்
முன்கால் இடுக்குவரை
நான் எல்லா விழக்கிடுவேன்

அடுத்த தெரு வரைக்கும்
ஐயா நீ போவதென்றால்
அண்ணா துனண கேட்டு
அடம் பிடித்து நிற்பாய்

ஓர் நாள் பயணத்திலும்
வேரெங்கும் தங்காமல்
என் சேலை நுனி பிடித்தே
இரவுதனில்  துாங்கிடுவாய்

பட்டணம் சென்றாலும்
பணப்பெட்டி வராட்டாலும்
பெற்ற தாய் பாசமையா
பிள்ளைக்காய் ஏங்குகிறேன்

நீயிருக்கும் முகவரிக்கு
நித்தம்  எழுதுகிறேன்
நின்பதிலைக் காணவில்லை
நிம்மதி இழந்து விட்டேன்

வந்தவர் எல்லோரும்
கண்டதாய் சொல்லுகிறார்
கடிதம் வருமென்று
காகத்தை விளிக்கின்றேன்

தொலை துாரம் சென்றதனால்
தொப்புல்  கொடி
அறுந்ததாய்யா !!
தொல்லை நான் என்ன செய்தேன்

எங்கு வாழ்ந்தாலும்
நிறைவுடனே நீ வாழு
கருவளர்த்த என் வாயால்
கண் கசிய வாழ்த்துகிறேன்

முடிந்தால் பதில் எழுது
மூதேவி நான் என்று
இப்படிக்கு
பெற்றதாய்
ப.பார்தீ

No comments:

Post a Comment