Saturday 11 August 2012

நீ எனக்குள் நீரானாய்



மனக் குமுறலால்
வாசல் உடைக்கப்பட
கண்களுடன்
அணைக்க முடியாது
தவற விடப்பட்ட என் கருவறைக்கு

பிறப்பையும் இறப்பையும்
சமனாக எண்ணும்
எண்ணத்தை
தனிமையும் பிரிவும்
ஏக்கக் கடலில் ஆழ்த்தி விட்டது


அகதி என்ற வாழ்வுக்கு
அனுமதி கிடைக்காதவரை
காற்றிடம் தான்
உன் எச்ச சுவாசத்திற்கு
உரிமை கோரமுடியும்

ஆறு காலங்களின்
அழகிய சுவைகள் எல்லாம்
நீல வான் பரப்பில்
நிலா அற்ற வெறுமையே
என் நினைவுச் சுமையில்

உன் நீர் குடம் உடைத்த போது
நீ கொண்ட மகிழ்ச்சிக்கு
என் தாய் மனம் ஏங்கும்போது
நான் செய்த தவரிற்கும்
காலம் சொல்லிய பதிலுக்கும்
கடைசியில் நானும்
கண்களை துடைக்கிறேன்
ப.பார்தீ

No comments:

Post a Comment